Monday, March 24, 2008

மண்ணுக்குள் ஒரு நயாகரா...!



அதென்ன மண்ணுக்குள் ஒரு நயாகரா...?

நயாகரா நீர்வீழ்ச்சி உலகமறிந்த ஒன்று. ஆனால்
'நயாகரா கேவ்' உலக அளவில் பிரசித்தி பெறவில்லை
என்றாலும் அமெரிக்கா அறிந்த ஒன்று. சுமார் 400 மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்திய காலத்தியது என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன். நயாகரா கேவ்வை ஒரு வலம் வருவோமா?

மின்னசோட்டா மாநிலம் ஹார்மோனி நகரிலிருந்து
இரண்டரை மைல் தூரத்திலுள்ளது. பிரதான சாலையிலிருந்து
அம்புக்குறி கை காட்டிய திசையில் சென்றபோது
ஒரு சிறிய வீடு தென்பட்டது.

காரை நிறுத்திவிட்டு "நயாகரா கேவ்" போகும் வழியைத்
தேடினால் கண்ணுக்கு எட்டியமட்டும் அடர்ந்த காடாகத்தான் தெரிந்தது.
அந்த வீட்டைச் சுற்றி வந்த போது வீட்டிற்குப் பின்புறமாக ஒத்தையடிப்
பாதை ஒன்று கண்ணுக்கு எட்டிய தூரம் வளைந்து வளைந்து
போய்க் கொண்டிருந்தது.

பாதையில் யாரும் போகவோ வரவோ இல்லை.
வேறு வழி புலப்படாமல் கதவைத் தட்டி வழி கேட்க
முடிவு செய்து காலிங் பெல்லைத் தேடினால் மிஸ்ஸிங்.
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே,
என்று திறந்து உள்ளே நுழைந்தால்...!



"நயாகரா கேவ்" உங்களை வரவேற்கிறது. என்று சிறு வாசகம் வரவேற்புரைத்தது. "ஹலோ...ஹாய்... என்ற புன்முறுவலோடு
அங்கிருந்த பெண்ணிடம் முகத்தில் வழிந்த அசடை மறைத்து ஒரு
ஹாயை பவ்யமாகச் சொல்லிக் கொண்டே டாலர்களை நீட்டினோம்.

"குகைக்குள் குளிரும். கோட், ஷூ எல்லாம் இருக்கிறது.
தரட்டுமா?"
என்று நுழைவுச் சீட்டைக் கொடுத்துக் கொண்டே கேட்டார்.
"சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால்பணம்" என்ற
பழமொழி வேறு தேவையில்லாமல் நினைவில் எழ, டிக்கெட்
எட்டரை டாலர், கோட்டுக்கும் ஷூவுக்கும் எட்டு டாலர் என
கறந்து விடுவார்கள் என்ற முன்ஜாக்கிரதை காரணமாக
"அதெல்லாம் வேண்டாம்" என்று அவசர அவசரமாகச்
சொல்லிவிட்டு நகர்ந்தோம். நமக்குள் ஒரு ஆச்சரியம்
குடைந்து கொண்டே இருந்தது.

ஒரு டபுள் பெட் ரூம் சைசில் உள்ள இந்த வீட்டில் குகை
எப்படி அமைந்திருக்கும்? நீர் வீழ்ச்சி எப்படி இருக்கும்?
யோசித்துக்கொண்டே நகர்ந்தோம். பத்துப்பதினைந்து பேர்கள்
கவச உடைகள் சகிதமாக உட்கார்ந்திருந்தனர். பகுதி நேரமாக
வேலை செய்யும் ஒரு மாணவனும், மாணவியும்தான் நமக்கு
வழிகாட்டிகள்!.

"உள்ளே இருக்கும் இரண்டு குரூப்பில் ஒரு குரூப் வந்ததும்
நாம் போகலாம்" என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்
போதே அலிபாபா குகை கதவு திறப்பது போல திறக்க ஒரு
கூட்டம் வெளியேறியது. உங்களுக்கு கோட் தரட்டுமா?
உள்ளே குளுருமே என்று கைடு நங்கை நளினமாக
நம்மிடம் கேட்டார். விடமாட்டார்கள் போலிருக்கிறதே
என்று நினைத்து, "இது சம்மர். நம்மள குளிரெல்லாம்
டச் பண்ணாது என்றோம்."

வழிகாட்டி,"·ப்ரீதான்," என்றார்.

இனிமேல் வாங்கிப்போட்டுக் கொண்டால் நம் கெளரவம்
என்னாவது? பலமாக மறுத்து எப்படி தலைஅசைத்துவிட்டு
நாமும் வலது காலை எடுத்து வைத்து குகைக்குள் நுழைந்தோம்.


மணிமேகலை...கிணறு

கும்மிருட்டு. செங்குத்தாகக் கீழிறங்கும் படிக்கட்டில் டார்ச்
ஒளியை பாய்ச்சியவாறே வழி காட்டிகளில் ஒருவர்
பார்வையாளர்களுக்கு முன்னும் இன்னொருவர் பின்பும்
வந்தனர். முன்னால் செல்லும் வழிகாட்டி ஆங்காங்கே
மின்விளக்குகளை எரிய விட்டுக் கொண்டே போகிறார்.
அந்த இடத்தைக் கடந்ததும் பின்னால் வருபவர் மின்விளக்கை
அணைத்துக் கொண்டே வருகிறார்.

ஒரு 25 அடி கீழிறங்கியதும் கொண்டை ஊசி வளைவுத்
திருப்பம். இப்போது சமதளப் பாதை சிறிது சிறிதாக சரிந்து கொண்டே இறங்குகிறது. "விஷ்ஷிங் வெல்" என்று ஒரு கிணறு. நாவினிக்கும்
இளநீர் போன்ற நீர். மோட்டார் வைத்துத் தண்ணீர் எடுத்துப் பயன்
படுத்துகிறார்கள். வருடம் முழுக்க ஒரு டவுனுக்கே தண்ணீர் சப்ளை
செய்தாலும் வற்றாத ஜீவக் கிணறு என்றார். (இந்த மணிமேகலை
அட்சய பாத்திரக் கிணறை எங்கள் தமிழ் நாட்டுக்கு கொடுக்கமுடியுமானால்
எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒரு நப்பாசைதான்.)

குட்டி நயாகரா....

அடுத்த இருபது அடியில் இன்னொரு கொண்டை
ஊசி வளைவு... இப்படி இரண்டு திருப்பங்கள் நடந்து
கடந்து திரும்பினால் "ஹோ" வென்ற பேரிரைச்சலோடு
குற்றால அருவியாய் தண்ணீர் கொட்டோகொட்டென்று
கொட்டுகிறது. அறுபதடிக்கு கீழே அந்த தண்ணீர் கீழே விழுந்து
புரண்டு நதியாக ஒடுகிறது. அண்ணாந்து பார்த்தோம்!

குட்டி நயாகரா. ஆம்! நயாகரா நீர் வீழ்ச்சியே 167
அடிதானே! பூமியைத் துளைத்துக்கொண்டு எங்கிருந்து
இத்தனை வேகமாக வந்து கொட்டுகிறது?

நதி இல்லாத அருவி.
அருவியே நதியாகி ஓடும் விந்தை!
மண்ணுக்குள் யாருடைய தாகம் தீர்க்க பிரவேசிக்கிறது?
பூமித்தாயின் வயிற்றுக்குள்ளேயே
வலம் வந்து தாவர வேர்களுக்கு
விருந்து வைக்கிறதோ?

முதுகெலும்பை ஊடுருவி குளிர்
குதூகலித்துக் கொண்டிருந்தது.

டைட்டானிக்....

ஒருவர் மட்டுமே வெகு கவனமாக நடக்க வேண்டியிருந்தது.
கொஞ்சம் கூட கை வீசி நடக்க முடியாது. தப்பித் தவறி
உரசினால் வைரம் பாய்ந்த பாறைகள் நம் சதையை ருசி
பார்த்துவிடும் அளவிற்கு குறுகிய இடம்.

அம்மாவாசையின் இருள். "இதோ இதுதான்
"டைட்டானிக் ஷிப்" என்று கைடு சொன்னபோது
நொடியில் திடுக்கிட்டுப் போனோம். மண்ணுக்கு அடியில்
தானே வந்தோம். எப்போது அது கடலுக்கு அடியாக மாறியது?



நல்லவேளையாக வெளிச்சம் வந்தது. கைடு கை நீட்டிய இடத்தில்
பார்த்தால் கப்பலின் முன் பகுதி போன்ற அமைப்புடன்
"பிரம்மாண்டமான க(ப்ப)ல் டைட்டானிக் கப்பலின் முன்
பகுதி போல் நீட்டிக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச்
சரிந்து சரிந்து அந்த வளைவை திரும்பினால்...!


வரையாத சித்திரங்கள்....

அடாடா என்ன அற்புதம்? மண்ணுக்கு கீழே இப்படியொரு
மகத்துவமா? இங்கு இயற்கை ஒளித்துவைத்து இருக்கிற
மின்னும் தாதுப்படிவங்கள் கண்ணுக்குள் வெளிச்சவிழுதுகளாய்
இறங்கி கற்பனைச் சிறகு விரிக்கும் நிஜக் குகை என கவிதை
ஊற்றெடுக்கத் துவங்கியது. கற்பாறை கசிந்துருகி தாதுப்படிவங்கள்
பிக்காசோ ஓவியமாய் செதுக்கித் தொங்கவிட்டது போல் தெரிந்தது.

ஓவியனின் தூரிகை வரையாத வண்ணச் சித்திரங்கள் பாறைகளில்
மிளிர்ந்தது. சூரியகாந்திப் பூக்களை ஒட்டுமொத்தமாக குவித்துப்
பரப்பியது போன்றே தெரிந்தது. இயற்கை, இருட்டுக்குள் சூரிய
வெளிச்சப் பூக்களை சிதறவிட்டது எப்படி? வைரக் கல்லில் சூரியப்
பூக்களா? சிறிதும் பெரிதுமான இந்தப் பூக்கள் அப்படியே நம்மை
வசியப்படுத்தி நிற்க வைக்கின்றன. பாறைகளில் வடிந்து படிந்து
சிற்பி செதுக்காத, ஓவியன் தீட்டாத அழகினைத் தரிசிக்க கண்
கோடி வேண்டும்.


திருமணங்கள் இங்கே...!

"தரை மட்டத்திலிருந்து இப்போது 110 அடி கீழே வந்திருக்கிறோம்.
அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு சர்ச்...!" என்றார் கைடு.
ஆலயத்துக்கே உரிய அமைதி. மெழுகு வர்த்திகள் தங்களை
உருக்கி வெளிச்சம் தந்து கொண்டிருந்தன. சர்ச்சில் உள்ள
பீடம் போன்ற அமைப்பை இயற்கையே எழுப்பியுள்ளது.
இருபது பேர்கள் தாராளமாக அமர்ந்து பிரார்த்தனை செய்ய
வசதிகள் செய்யப் பட்டிருந்தது.


"இந்த சர்ச்சில் ரெகுலரா மாஸ் நடக்கிறதோ இல்லையோ
திருமணங்கள் அடிக்கடி நடக்கிறது. அநேகர் விருப்பப் பட்டு
இங்கே வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அருகிலுள்ள
ஊரிலிருந்து பாதிரியார் வந்து திருமணத்தை நடத்தி வைப்பார்"
என்றார் கைடு.


லாஸ்ட் ரூம்....

திக்குத் தெரியாத எதிர் திசையில் நடந்து திரும்பிக் கீழிறங்கினால்
'சலசல' வென சத்தமிட்டோடும் பளிங்கு நீரோடை. குட்டிநயாகரா
அருவி மேலே பார்த்தோமே...

அதே நீர்வீழ்ச்சிதான் உற்சாகமாக விழுந்து புரண்டு ஓடுகிறது.
அங்கு நிலவிய குளிரிலும் கூட அந்த ஜீவ நதியில் நீந்தி அக்கரை
செல்ல ஆசை முளைத்தது. ஆசையாய் ஒரு கை தண்ணீரை அள்ளி
வாயருகே கொண்டு போனபோது கைடு நோ என்று தட்டிவிட்டு
விட்டார்.

கணக்கு வழக்கில்லாமல் ஏராளமான தாதுக்களோடு ஓடி வருகிற
தண்ணீரில் உங்கள் உடம்புக்கு ஒவ்வாத பொருள் இருக்கலாம்.
அதனால்தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார்.
நம் ஆசைக்கு அணையிட்டு மெல்ல குகையின் இறுதிப்
பகுதிக்கு விரைந்தோம்.

குகையின் வால் பகுதிக்கு வந்து நின்றோம். இந்த
குகையின் சரித்திரம் இதோடு முடிகிறது என்று கைடு
கைகாட்டிய பகுதி இருட்டுப் படிந்திருந்தது.

பாறை கூம்பு
வடிவில் சுருண்டு புனல் வாயை அடைத்தது போல தெரிந்தது.
அதற்கு மேல் கண்கள் எதையும் உள் வாங்க மறுத்தது. நாமும்
அடம் பண்ணாமல் வந்த வழியே திரும்பத் துவங்கினோம்.

மீண்டும் நாம் பூமி மேற்பரப்புக்கு வந்து சேர்ந்தபோது ஒரு
மணி 16 நிமிடங்கள் ஆகியிருந்தது. மண்ணுக்குள் இருந்த மகத்தான
ஒரு பொன் பொழுது இது!

உங்கள் அதிர்ஷ்டம் இந்தப் பையில் இருக்கலாம்.
ஒரு பை வாங்கிப் பாருங்கள் என்றார் வரவேற்பறை
வனிதை. சிறிய பை (3.75 டாலர்) பெரிய பை (5.50 டாலர் )
என்று காகிதப் பைகளில் குகையின் அடிப் பகுதிகளில்
சேகரித்த தாது மண் படிவத் துகள்களை நிரப்பி வைத்திருந்தனர்.

விதவிதமான ஜெம் ஸ்டோன் கிடைக்கும் என்ற ஆசையில்
எல்லோரும் ஒன்று, இரண்டு என பைகளை வாங்கிக்
கொண்டிருந்தனர். தூத்துக்குடி கடற்கரையில் சிறிய பெரிய
கூடைகளில் முத்துச் சிப்பிகளை வாங்கிக் கொண்டு போய்
முத்து கிடைக்குமா? என உடைத்துப் பார்க்கும் கூட்டம்தான்
ஞாபகத் திரையில் பளிச்சிட்டது. எல்லோரும்
"பை"களுக்காக காத்து நின்றபோது நாம் அங்கிருந்து
"பைய" நடையைக் கட்டினோம்..


No comments: