Monday, March 24, 2008

19ம் நூற்றாண்டுக்குப் போகலாம்.. வாரீயளா?

''அமெரிக்க கிராமம் பார்க்கவாரியளா...!?

"ஜோஸ்யம் பாக்கலையோ... ஜோஸ்யம்...
கை ரேகை பாக்கலையோ கை ரேகை..." என்ற
சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தால்...
பின்னே நம்ம ஊரா இருந்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டோம்.
சத்தம் கேட்ட இடம் அமெரிக்காவாச்சே!?

நம் தாத்தாவின் தாத்தா வாழ்ந்த காலங்களைப் பற்றிக்
கண்டவர்கள் இல்லை. அவர் வாழ்ந்த காலம், இடம்,
சூழல் இவற்றையெல்லாம் வரலாறுகளை வாசித்து மனக்
கண்ணில் ஓடவிட்டுப்பார்த்துக் கொள்ளத்தான் முடியும்.

ஆனால் 1800களில் இருந்த அமெரிக்கக் கிராமம் ஒன்று
இன்னும் அப்படியே பராமரிக்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக
இருக்கிறதல்லவா! வாருங்கள் அந்த அற்புதக் கிராமத்தை ஒரு
ரவுண்டு அடித்து வருவோம்!

நிகழ்கால வரலாறு.....

சற்றே கண்களை மூடி உங்கள் கற்பனைச்
சிறகை விரியுங்கள். இப்போது....நீங்கள்...
கடவுச் சீட்டு இன்றி அமெரிக்காவில் மின்னசோட்டா
மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் சாக்கோபி
பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பாதங்கள் தரையிறங்கிப்
படர்ந்த காலம் மட்டும் சற்றே பின்னோக்கி ....


19ம் நூற்றாண்டு...

அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த
பசுமைச் செழிப்பில் ஊறித் திளைத்திருந்த மின்ன சோட்டா
நதிக்கரையில் செக், டானிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், ஐரிஸ்,
நார்வே மற்றும் ஸ்காண்டிநேவியன், ஆங்கிலேயர் என
பன்னாட்டு மனிதர்களும் கூட்டுக் கலவையாக வந்து குவிந்து
வாழத்துவங்கிய இடம் "மர்பி கிராமம்". அன்றைய அமெரிக்க
அதிபர் போல்க், டகோட்டா இண்டியன் (இந்தியர் அல்ல)
ஏஜெண்டாக மேஜர் மர்பி என்பவரை நியமித்தார்.
"மேஜர் மர்பி" காலுன்றிய இடம்தான் மர்பி
கிராமமாக பின்னர் மாறியது. 88 ஏக்கர் பரப்பளவில்
மர்பி கிராமம் அமைந்துள்ளது.


இன்றைக்கு அமெரிக்காவில் எந்தக் கிராமமும் கிராமம்
போல் இருக்காது. கிராமியத்தனம் இம்மி கூடத் தெரியாது.
ஆனால் மர்பி கிராமம் 1800களின் மண் சாலையோடு
இன்றைய நாகரிக நிழல் படியாமல் அரிக்கேன் விளக்கு
வெளிச்சங்களில் "பாரதிராஜாவின்" கிராமத்து மண்
வாசனையோடு இருந்திருப்பதை அறியமுடிகிறது.

அவர்கள் வாழ்ந்த கிராமம், கடைத்தெரு, பள்ளி,
கோவில், கடைகள், கிராம அதிகாரி அலுவலகம்,
வங்கி, அச்சுக்கூடம், கிட்டங்கி, கொல்லன் பட்டறை,
காவல் நிலையம், உணவு விடுதி, ஒயின் கடை,
கேளிக்கை விடுதி, பண்ணை வீடுகள், நீதிமன்றம்
என 1800களை அப்படியே நம் கண் முன்
நிறுத்தியிருக்கிறார்கள்.

அன்றைய அமெரிக்கக் கிராமத்தை இன்றைய
இந்திய சிறு நகரத்திற்கு ஒப்பிடலாம்; 'மியூசியம்'
என்கிற சடங்குத்தனமின்றி சற்று வித்தியாசமாக ஒரு
ஊரையே வளைத்து மரப்பலகை வேலியிட்டு பாதுகாத்து
இருக்கிறார்கள். கடந்த காலத்தை நிகழ்காலமாக... ஒரு
கற்பனை கலவாத நிஜமாகக் காண வைத்திருப்பது
பாராட்டுதற்குரியது.

அது மட்டுமல்ல அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர்களைப்
போல உடைகளில், நடைகளில், பச்சை ஆங்கிலத்தில் (
அது என்ன பச்சை ஆங்கிலம் என்கிறீர்களா? நாம் பச்சைத்
தமிழ் என்று சொல்வதில்லையா? அது போலத்தான்)
பேசிக்கொண்டு அந்தக் கிராமம் முழுக்க "செட்அப் மனிதர்கள்"
வலம் வருவதோடு, கிராம நிர்வாகம், அன்றாட நடவடிக்கைகள்
என்று அசலாக நடமாட விட்டிருப்பது சூப்பரோ சூப்பர்!

மினியாபொலிஸ் டௌன்டவுணிலிருந்து 35 நிமிடப் பயணம்
சாக்கோபி. இரண்டாள் உயரத்துக்கு நடப்பட்ட மரவேலி; மரவேலிக்கு
அந்தப் பக்கம் என்ன நடக்கிறது? நீங்கள் பார்க்க வேண்டாமா?
என்ற கேள்வியோடு மரச் சுவர் ஏறி எட்டிப் பார்க்கிற ஒரு குடும்பச்
சுவரொட்டி பெரிதாக கண்களில் படுகிறது. நபருக்கு நுழைவுக் கட்டணம்
எட்டு டாலர். நுழைவுச் சீட்டை நெற்றியில் ஒட்டாத குறையாக
ஸ்டிக்கரைப் போல சட்டையில் ஒட்டி விடுகிறார்கள்.

உள் பக்கம் நுழைந்தால் நீநீநீநீளமான ரெட்டைக் குதிரை பூட்டப்பட்ட
சாரட் வண்டி தயாராக நிற்கிறது. குதிரை என்றால் அரேபியக் குதிரைகள்
என்பார்களே அந்தக் குதிரைகளை எல்லாம் மிஞ்சும் ஜாம்பவான் குதிரைகள்;
ஐம்பது பேர்களுக்கு மேல் தாராளமாகப் பயணிக்கலாம். ஐந்து நிமிடத்தில்
குதிரை வண்டி ஹவுஸ் ·புல் ஆகி விடுகிறது. மூன்று பர்லாங் தூரம் பயணம்.
காட்டுக்குள் செல்வது போல இருக்கிறது.

திடீரென்று ஒரு படு சுறுசுறுப்பான கிராமம். வண்டியிலிருந்து
கீழே இறங்கினால் முதலில் தென்படுவது கொல்லன் பட்டறை.
பட்டறையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள்
தங்கள் உழவுக் கருவிகளை கூர்படுத்தி வாங்குவதும், பட்டறையில்
இருப்பதைப் பேரம் பேசி வாங்குவதும், பட்டறைக்காரரின் மனைவி அவ்வப்போது "சாப்பிடாமல் கூட என்னங்க வேலை பாக்குறீங்க?" என்ற
கொஞ்சல், அதட்டல் எல்லாம் அவர்களின் மாமூல் வாழ்க்கையை
வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.


பெரிய பண்ணை...
அடுத்து "பெரியபண்ணை" வீடு. விவசாயத்துக்கு வேண்டிய
இடுபொருட்களிலிருந்து, குளிர் காலத்தில் கால்நடைகளுக்கு
வேண்டிய தீவன சேமிப்புக் கிடங்கு, தானிய சேமிப்புக் கிடங்கு,
கால்நடைகள் ஓய்வுக் கூடம், உழவு, களையெடுப்பு, கதிரறுப்பு
இத்யாதிகள்... இத்யாதிகள் என இயந்திரங்களின் அணிவகுப்பு.

அந்தக் காலகட்ட மிட்டாமிராசுகள் வாழ்ந்த பண்ணை வீட்டு
வசதிகள் ஒரு கணம் வியப்பிலாழ்த்தியது; இந்த வசதிகள்
இன்றைக்குக்கூட இந்தியக் கிராமங்களில் வாழ்கிற "பெரிய
பண்ணையம்" களில் இருக்கிறதா என்பது சந்தேகமே!

அடுத்தடுத்து சின்னதும் பெரிதுமான வீடுகள்; எதிர்ப்புறம்
'எலிமெண்டரி ஸ்கூல்' என்ற பலகை தொங்குகிறது. கதவில்
லஞ்ச் டயம் என்ற அறிவிப்பு காணப்படுகிறது.

வரிசை வரிசையாக இருக்கிற வீடுகளைக்
கடந்து நடந்தால் கடைத்தெரு.

குறுக்கும் நெடுக்குமாக குதிரைகளில் போகிறவர்கள், வருகிறவர்கள்.
ஒரு சலூன். சலூன் என்பது அந்தக் கிராமத்தின் கேளிக்கை
விடுதியாகும். ஆண், பெண் பேதமின்றி புகை பிடித்துக் கொண்டும்,
மது அருந்திக் கொண்டும், சீட்டு விளையாடிக் கொண்டும்,
சந்தோஷங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

ஓடிவா..ஓடிவா கிளாஸ் ஒரு டாலர் என்று கூவி விற்காமல்
அந்த விடுதியின் நடு நாயகமாக ஒரு பெண் "ரூட் பீர்" எனப்படும்
மது பானத்தை கண்ணாடி தம்ளர்களில் அளந்து விற்றுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் "ஜோஸ்யம்
பாக்கலையோ ஜோஸ்யம்" என்ற பெண் குரல் கேட்டு குரல் வந்த
திசைக்கு நம் பார்வை திரும்பியது.


"இவ்விடம் கைரேகை பார்க்கப்படும்" என்ற போர்டு தொங்கிக்
கொண்டிருக்க சிலருக்கு கைரேகை பார்த்துச் சொல்லிக்
கொண்டிருந்தார் ஒரு அமெரிக்க நங்கை. கையில் ஒரு
சிறு குச்சியை வைத்துக் கொண்டு நம்மூர் ஜக்கம்மா ஸ்டைலில்
அவர்களின் எதிர்காலத்தை விலாவாரியாக ஒரு ராகத்தோடு சொல்லிக்
கொண்டிருந்தார்.

நம் கையிலிருந்த காமிராவில் அதைக் கிளிக்கிக்
கொண்டு நிமிர்ந்த போது டமால், டுமீல் என துப்பாக்கி வெடிக்கும்
சத்தம் கேட்டு பயந்தே போனோம். கால்கள் ஓட்டப் பந்தய வேகத்தில்
ஓடுவதற்குத் தயாரான போது, அருகிலிருந்த அமெரிக்கர் நம்மை
நிறுத்தி விபரம் சொன்னார். அப்புறம்தான் சத்தம் கேட்ட
திசைக்கு நகர்ந்தோம்.

நிழல் நிஜங்கள்...

கெளபாய் குள்ளர்கள் அங்கிருந்த வங்கியின் காவலாளியை
சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு குதிரைகளில் விரைந்து
கொண்டிருந்தனர். விசாரித்ததில் இதே சம்பவம் 1817ம் ஆண்டு
நடந்ததாகவும் அதை நிஜம் போல் நடித்துக் காட்டுவதாகவும்
ஒரு மணிநேர இடைவேளைக்குப் பிறகு டவுன்ஹாலில் கோர்ட்
விசாரணை இருப்பதாகவும் சொன்னார்கள்.


டவுன்ஹால் எனப்படும் கிராம நிர்வாக அலுவலகத்தில் எட்டிப்
பார்த்தால் விசாரணை நடந்து கொண்டிருந்தது. காரசாரமாக நடந்த
வக்கீல்களின் விவாதத்தைப் பொறுமையாக நீதிபதி 'ஐசக் அட்
வாட்டர்' செவி மடுத்துக் கொண்டிருந்தார். கடைசியில் வங்கிக்
காவலாளியை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த குற்றத்திற்காக
சம்பந்தப்பட்ட இரண்டு கெளபாய் குள்ளர்களையும் தூக்கிலிடும்படி
உத்திரவிட்டார்.

குற்றவாளிகளைக் காவலர்களும் ஷெரீப்பும் ஒரு மரத்தில்
தூக்கிலிட அழைத்து வந்தனர். தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள்
நடந்து கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வந்த கெளபாய்
ள்ளர்கள் கூட்டம், படபடவென்று காக்கை குருவிகளைச் சுடுவது
போல மற்றவர்களைச் சுட்டுத்தள்ளிவிட்டு கைதிகளை அபேஸ்
பண்ணி மறைந்தனர். சினிமா சூட்டிங் பார்ப்பது போல ஆயிரக்
கணக்கானோர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.



இதேபோல 1800களில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு
நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நடித்துக்
காட்டுகின்றனர். சம்பவங்களை மேடையில் நடித்துக்
காட்டுவதைவிட கிராமியச் சூழலில் செயற்கைத் தனம்
தெரியாமல் இயல்பாக நடப்பதாகவே செய்து காட்டுவது19ம்
நூற்றாண்டின் நிழலை நிஜமாகத் தரிசிக்க முடிகிறது.

வேட்டையில் கிடைத்ததை திறந்தவெளியில் அடுப்பு மூட்டி
மைத்துச் சாப்பிடுகிற ஐரிஷ் குடும்பத்தைக் காணமுடிகிறது.

குதிரைகளுக்கு லாடம் அடிக்க வந்தவர்கள், விதவிதமான
பிராணிகளின் தோல்களை பேரம் பேசி வாங்குபவர்கள்,
விற்பவர்கள், கைத்துப்பாக்கியிலிருந்து வேட்டைத் துப்பாக்கி
வரை ரகம் ரகமாக விற்கும் பிரெஞ்சுக் கடைக்காரர், ஊசிமணி,
பாசிமணி விற்கும் காட்டுவாசிகளான அமெரிக்க இண்டியன்கள்
என அந்தக் கிராமம் சுறுசுறுப்புக் காட்டியிருந்ததை அறிய முடிகிறது.

கிராமத் தெருக்களில் ஆங்காங்கே சிற்றுண்டிவிடுதி, உணவு
விடுதிகளெனப் பூத்திருக்க கலவையான ஜனங்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

மதுரை மணம்...
அந்தக் காலத்து வீடுகள் சிலவற்றை ஒரு சின்ன விசிட் அடித்ததில்
அவர்களின் வாழ்க்கை வசந்தப்பொழுதுகளில் சொகுசாக இருந்ததை
அறிய முடிகிறது.

ஹால், கிச்சன், டைனிங், ஸ்டோர், பெட்,
பாத் என சகலகலா வசதிகள் வீடுகளில் உள்ளன. வீட்டைச் சுற்றி
அல்லது ஒரு பகுதியில் வீட்டுக்குத் தேவையான தக்காளி, காரட்,
பீன்ஸ், உருளை, கோஸ் என பயிரிட்டிருந்தததைப் பார்க்க முடிந்தது.

வீட்டின் உட்புறம் கைவேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களாலும்,
புராதனப் பொருட்களாலும் வெகுநேர்த்தியாக வடிவமைக்கப்
பட்டிருக்கிறது. சுவர்களில் வண்ணச் சித்திரங்கள் கலை
நயத்தோடு காட்சி அளிக்கிறது. வண்ண வண்ணப் பூச்செடிகள்
ஜாடிகளில் ஆங்காங்கே அலங்காரமாய் வீற்றிருக்கின்றன.

அன்றைய சாதாரண அமெரிக்கக் கிராம வீட்டில் நவீன
தையல் இயந்திரம் இருந்தது. குளிர்காலத்தில் கதகதப்புக்கு
கம்பளி நெசவு செய்யும் கைத்தறிக் கூடத்தை வீட்டின்
முற்றத்தில் வைத்திருந்திருக்கிறார்கள். டடக்...டடக்
என்று பெண்கள் தறி ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தத் தறி ஒலி மதுரை செளராஷ்டிரத் தெரு ஒன்றில்
நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தியது.

சுத்திச் சுத்தி வந்தீக...

வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும்
இந்த "மர்பி கிராமம்" உயிர் பெற்று எழுகிறது. மற்ற
நாட்களில் அவர்கள் வாழ்ந்த இடம், வீடு, தோட்டம்,
பள்ளி, சர்ச் என எல்லாம் நினைவிடங்களாகக் காட்சி
அளிக்கிறது; தனியார் நிறுவனப் பராமரிப்பில் உள்ள இந்த
மர்பி கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் நிரந்தரமாக
குடும்பங்களைச் சம்பளம் கொடுத்துக் குடியமர்த்தியுள்ளார்கள்.

அவர்கள் வேலை 19ம் நூற்றாண்டு மனிதர்களாக வாழ்க்கை
நடத்துவது மட்டும்தான். அவ்வப்போது சில சம்பவங்களை
இயல்பாக நடித்துக் காட்ட மட்டும் தன்னார்வத் தொண்டர்களுக்குத்
தினசரி சம்பளம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார்கள். கிராமமே ஒரு
நாடக மேடையாகவும் அங்கு வாழும் மக்கள் எல்லாம் நடிகர்கள்
என்பதை ஏனோ நம் மனம் நம்ப மறுக்கிறது.

"OLD IS GOLD" இல்லையா? என்ன... அமெரிக்க கிராமத்தை
சுத்திச்சுத்தி வந்தீக...இனி வந்த வழியே கெளம்ப வேண்டியதுதான்.
கெளம்ப மனசு வரலியா? இங்கேயே நின்னுட்டா எப்டி?

மண்ணுக்கு மேல மணமா பாத்தீக. அடுத்து மண்ணுக்கு
கீழ ஒரு இடத்தைப் பாக்கப் போறோம். அது என்னாங்கிறீங்களா? அது
வரை பொறுமையா அமெரிக்கக் கிராமத்து மண் வாசனையை அனுபவிங்க!

குறிப்பு:- அமெரிக்காவில் இதுபோன்ற பாரம்பரியக் கிராமங்கள் மாநிலம்
தவறாமல் அங்கங்கே அமைந்துள்ளது.

No comments: